நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேரும் புத்தரின் புனித எச்சங்கள் டெல்லியில் பிரம்மாண்ட சர்வதேச கண்காட்சியை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் ‘தி லைட் அண்ட் தி லோட்டஸ்’ என்ற பெயரில் புத்தரின் புனித பிப்ரவா எச்சங்களின் சர்வதேச கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். 1898 இல் கண்டறியப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கொண்டுவரப்பட்ட இந்த அரிய எச்சங்கள், நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இதில் தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள புத்தரின் ஆரம்பகால வாழ்க்கை தொடர்பான தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இளம் தலைமுறையினரை இந்தியாவின் கலாச்சார வேர்களுடன் இணைக்கும் முயற்சியாக இந்த கண்காட்சி அமைகிறது. சாஞ்சி ஸ்தூபியின் மாதிரிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மல்டிமீடியா காட்சிகள் மூலம் புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகள் இங்கு விளக்கப்படும். புத்தரின் புனித எச்சங்களை மீண்டும் ஒருசேர கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இது இந்தியாவின் நாகரிகத் தொடர்பை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.