நாளை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் நாளை மார்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் புதிய திட்டங்களையோ அரசாணைகளையோ வெளியிட முடியாது என்பதால், இன்று விடுமுறை தினத்திலும் தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். நிலுவையில் உள்ள முக்கிய கோப்புகளை உடனடியாக முடிக்க மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையில், இன்றைய தினம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நிர்வாக அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் சென்றுவிடும் என்பதால், அதற்கு முன்னதாகவே அனைத்து முக்கியமான அரசாணைகளையும் பிறப்பிக்க அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாளை முதல் தற்போதைய அரசு காபந்து அரசாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.