தொடர்ந்து பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா இது பெரிய உடல்நல பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

தவறாமல் பல் துலக்கினாலும் சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசுவது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். மருத்துவ மொழியில் ‘ஹலிடோசிஸ்’ என்று அழைக்கப்படும் இந்த பிரச்சனை, வெறும் வாய் சுகாதார குறைபாட்டால் மட்டும் ஏற்படுவதில்லை. சுமார் 85 சதவீத துர்நாற்றம் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்பட்டாலும், மீதமுள்ள 15 சதவீத காரணங்கள் உங்கள் உடலின் உட்புற உறுப்புகள் சார்ந்த நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
செரிமான கோளாறு, சைனஸ் பாதிப்பு, கல்லீரல் அல்லது சிறுநீரக கோளாறுகள் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் மூச்சில் துர்நாற்றம் வீசக்கூடும். மேலும், போதிய அளவு நீர் அருந்தாமை மற்றும் வைட்டமின் குறைபாடும் இதற்கு முக்கிய காரணமாகும். எனவே, தினமும் நாக்கை சுத்தப்படுத்துவதுடன், அதிகளவு தண்ணீர் குடித்தும் பிரச்சனை குறையவில்லை என்றால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.