சத்தமில்லாமல் உயிரைப் பறிக்கும் வயிற்றுப் புற்றுநோய் அறிகுறிகள் இங்கே

வயிற்றுப் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை என்று அமெரிக்க புற்றுநோய் சங்கம் எச்சரிக்கிறது. வழக்கமான பரிசோதனை இல்லாத நாடுகளில், நோய் தீவிரமடைந்த பின்னரே இது கண்டறியப்படுகிறது. குறிப்பாக, உணவு உண்டவுடன் வயிறு உப்பசமாக இருப்பது அல்லது சிறிதளவு சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம். செரிமானப் பாதையில் ஏற்படும் அடைப்பு காரணமாக இத்தகைய மாற்றங்கள் நிகழலாம்.
காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் தீராத சோர்வு ஆகியவை இதன் முக்கிய எச்சரிக்கை மணிகளாகும். உடலின் உட்புற இரத்தப்போக்கு காரணமாக இரும்புச்சத்து குறைந்து, மூச்சுத்திணறல் அல்லது தலைசுற்றல் ஏற்படக்கூடும். மேலும், அடிக்கடி ஏற்படும் குமட்டல் மற்றும் மருந்துகளால் குணமாகாத நெஞ்செரிச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இந்த ‘சைலன்ட்’ அறிகுறிகளைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை பெறுவது உயிர் காக்க உதவும்.