கூகுள் மேப்ஸிற்கு சவால் விடும் மேப்பிள்ஸ் ஆப் இனி பொது போக்குவரத்திற்கும் வழிகாட்டும்

கூகுள் மேப்ஸிற்கு போட்டியாக உள்நாட்டு நேவிகேஷன் செயலியான மேப்பிள்ஸ் (Mappls) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இந்த ஒரே ஆப் மூலம் மெட்ரோ, பேருந்து மற்றும் ரயில் பயண விவரங்களை துல்லியமாக அறிய முடியும். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் இந்த சேவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதோடு, ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களை எளிதாக கண்டறியலாம்.
இந்த புதிய அம்சம் முதற்கட்டமாக ஐஓஎஸ் (iOS) மற்றும் இணையதள பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் நிகழ்நேர போக்குவரத்து நெரிசல் தகவல்களுடன் சேர்த்து, பொது போக்குவரத்து குறித்த விவரங்களும் கிடைப்பதால் பயணிகளின் சிரமம் குறையும். தனியார் வாகனங்களை தவிர்த்து மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.