குறைந்த விலையில் போலி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 5 பேர் கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் வாகன விபத்து வழக்கை ஆய்வு செய்தபோது, அவர் வைத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசி போலி என்பது அம்பலமானது. ஆன்லைன் மூலம் நான்கு சக்கர வாகனங்களை இருசக்கர வாகனங்களாகப் பதிவு செய்து, குறைந்த பிரீமியம் செலுத்தி, பின்னர் வாகன விவரங்களை மாற்றி மோசடி செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த மெகா மோசடியைக் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில் தென்காசி மற்றும் நெல்லையைச் சேர்ந்த சங்கரலிங்கம், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு போலி பாலிசிகளை வழங்கி பல லட்சம் ரூபாய் சுருட்டியது தெரியவந்தது. இவர்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.