காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மோடியின் தனிப்பட்ட கடிதத்துடன் டாக்கா சென்றடைந்தார் எஸ் ஜெய்சங்கர்

வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று டாக்கா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானை சந்தித்த ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய தனிப்பட்ட இரங்கல் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இந்த கடிதத்தில் இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிதா ஜியாவின் தொலைநோக்கு பார்வை இந்திய-வங்கதேச உறவை தொடர்ந்து வழிநடத்தும் என்று ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். இன்று மாலை 3:30 மணியளவில் அரசு மரியாதையுடன் அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான் கல்லறைக்கு அருகில் காலிதா ஜியா அடக்கம் செய்யப்படவுள்ளார். இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிலையில், இந்தியாவின் சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.