ஒரே லாஞ்சரில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட இரண்டு பிரளய் ஏவுகணைகள் துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணையை ஒடிசா கடற்கரையிலிருந்து இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒரே ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு, அவை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை 500 முதல் 1000 கிலோ வரை வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த இரட்டைச் சோதனை இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வரலாற்றுச் சாதனைக்காக டிஆர்டிஓ மற்றும் ராணுவத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் மற்றும் பாரத் டைனமிக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் கூறுகையில், இந்த வெற்றி பிரளய் ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளதை உறுதி செய்கிறது என்றார். இது இந்தியாவின் தற்காப்பு மற்றும் தற்சார்பு வலிமையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.