எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்கி இந்தியா உதவி

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் சந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்தியா முன்வந்துள்ளது. இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, அசாமின் நுமலிகார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ‘இந்தியா-வங்கதேச நட்பு குழாய் வழித்தடம்’ வழியாக 5000 டன் டீசல் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த எரிபொருள் தற்பொழுது தினஜ்பூரில் உள்ள பர்பதிப்பூர் சேமிப்பு நிலையத்திற்கு வந்தடைந்து கொண்டிருப்பதாக வங்கதேச பெட்ரோலிய கழகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும். ஆண்டுக்கு 1.80 லட்சம் டன் டீசல் வழங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. தற்போதைய சூழலில் மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க இந்தியாவிலிருந்து வரும் இந்த டீசல் வரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த போக்குவரத்து செலவில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்த குழாய் வழித்தடம் ஒரு முக்கிய தூணாக பார்க்கப்படுகிறது.