இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து திடீரென விலகினார் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய மகளிர் அணியில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நான்காவது போட்டியில் இருந்து விலகியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டாஸின் போது கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். லேசான காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக அவர் விளையாடவில்லை என்றும், பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமிமாவுக்குப் பதிலாக சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹர்லீன் தியோல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் ஜெமிமா ஏற்கனவே மூன்று போட்டிகளில் 104 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜெமிமா தவிர்த்து, இளம் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மூத்த வீராங்கனை அருந்ததி ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக சாம்பியனான இந்திய அணி இந்த மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்கிறது.