இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை தொடங்க தாமதமாவது ஏன் தெரியுமா

இந்தியாவில் சாட்டிலைட் இணையச் சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் வருகையில் நீடிக்கும் சிக்கல்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார். பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வது மற்றும் ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்வது ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால் இந்தச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சேவைகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவிலேயே தரவுகளைச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கட்டணம் தொடர்பாக ட்ராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கு இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சில கட்டணப் பரிந்துரைகளை ட்ராய் நிராகரித்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன் முன் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படவுள்ளது. பாதுகாப்பு அனுமதி கிடைத்த பின்னரே இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணையம் பயன்பாட்டுக்கு வரும்.