ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு நேர்ந்த அவமானம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் புரோ லீக் போட்டியில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணியினர் தங்கும் விடுதி கட்டணம் செலுத்தப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகினர். பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் மற்றும் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் வாடகையைச் செலுத்தத் தவறியதால், தேசிய வீரர்கள் நீண்ட பயணக் களைப்புடன் சாலைகளிலேயே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பயிற்சியாளர் தாஹிர் ஜமான் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் நேர மாற்றத்தால் ஆரம்பத்தில் பலனளிக்கவில்லை. இறுதியில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டாலும், வீரர்களுக்குப் போதுமான அறைகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஒரு சிறிய அறையில் 2-3 வீரர்கள் நெருக்கடியாகத் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் வெளிநாட்டு மண்ணில் நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.