ஆந்திராவில் நச்சு பால் குடித்த 14 பேர் பரிதாப பலி
March 13, 2026

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நச்சுத்தன்மை கொண்ட கலப்பட பாலை குடித்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது. அங்கீகாரம் இல்லாத வியாபாரியிடம் வாங்கிய அந்த பாலில் எத்திலீன் கிளைக்கால் என்ற ஆபத்தான ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனையில் மேலும் 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பால் வியாபாரி கணேஸ்வர ராவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.