அம்மா நான் பாஸ் ஆயிட்டேன் கல்லறையில் ரிப்போர்ட் கார்டுடன் நின்ற சிறுவர்கள் மனதை உலுக்கும் வீடியோ

சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒரு சில காட்சிகள் நம் இதயத்தை கணக்கச்சிதமாக உலுக்கிவிடும். அந்த வகையில், தற்போது இணையத்தை உறைய வைத்துள்ள ஒரு வீடியோவில், இரண்டு சிறுவர்கள் தங்களது பள்ளித் தேர்வு முடிவுகள் அடங்கிய மஞ்சள் நிற ரிப்போர்ட் கார்டுடன் ஒரு கல்லறைக்கு அருகில் நிற்கின்றனர். அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது தாயிடம், தாங்கள் தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
தாயை இழந்த அந்தச் சிறுவர்கள், தங்களின் கல்வி சாதனையைப் பாராட்டத் தாய் உயிருடன் இல்லை என்பதை உணராமல், கல்லறையின் அருகே அமர்ந்து உருக்கமாகப் பிரார்த்தனை செய்கின்றனர். “அம்மா பாருங்கள், நான் நன்றாகப் படித்து தேர்ச்சி பெற்றுவிட்டேன்” என்று அந்தப் பிஞ்சுகள் தங்களின் மதிப்பெண் பட்டியலைக் காட்டும் விநாடிகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது. தாயின் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு நின்ற விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “குழந்தைகளுக்குத் தாயை விடச் சிறந்த அங்கீகாரம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்றும், “இப்படியொரு நிலை எந்தக் குழந்தைகளுக்கும் வரக்கூடாது” என்றும் தங்களின் வேதனையையும் ஆறுதலையும் கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இந்த உருக்கமான காட்சி தற்பொழுது இணையம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.