ஈரான் பள்ளிக்கூடம் மீது அமெரிக்காவின் டோமஹாக் ஏவுகணை தாக்குதல் 150 மாணவிகள் பலி

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜாரா தயிப் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், அது அமெரிக்கப் படையினரால் ஏவப்பட்ட ‘டோமஹாக்’ ஏவுகணை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கையின் முதல் நாளிலேயே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழைய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தவறுதலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பள்ளி அமைந்துள்ள கட்டிடம் முன்பு ராணுவ தளமாக இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.