சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் விஜய்யின் மவுனம் குறித்து டாக்டர் ஷர்மிளா விளாசல்

நாடு முழுவதும் நிலவி வரும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காததை மருத்துவர் ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்த விஜய், தற்போது மக்கள் சந்திக்கும் இந்த இன்னல்கள் குறித்து அறிக்கை கூட வெளியிடாமல் அமைதி காப்பது ஏன் என்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு இந்தியாவில் இந்த எரிவாயு தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யின் இந்த மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.