சீனாவிலிருந்து ஏவுகணை தயாரிப்புக்கான மூலப்பொருட்களுடன் ஈரான் நோக்கி புறப்பட்ட இரண்டு மர்மக் கப்பல்கள்

வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ஏவுகணை எரிபொருளுக்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் வேதிப்பொருளுடன் ஈரானைச் சேர்ந்த ‘ஷப்திஸ்’ மற்றும் ‘பார்ஜின்’ ஆகிய இரண்டு கப்பல்கள் சீனத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்ட ஈரானிய நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்க உதவும் பொருட்களை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது. தென்கிழக்கு சீனாவின் ஜுஹாய் காவ்லான் துறைமுகத்திலிருந்து இந்த விநியோகம் நடைபெறுவது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் வேளையில், சீனாவிலிருந்து இந்த கப்பல்கள் புறப்பட்டது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கப்பல்கள் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை என்பதால், வணிகப் பொருட்களின் மறைவில் ராணுவத் தளவாடங்கள் கொண்டு செல்லப்படலாம் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க பென்டகன் அல்லது வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.