தொழிலாளர், விவசாயிகள் பக்கம் நான்! ராகுல் காந்தி அதிரடி ஆதரவு!

தொழிலாளர், விவசாயிகள் பக்கம் நான்! ராகுல் காந்தி அதிரடி ஆதரவு!

மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களைத் ரத்து செய்ய வேண்டும், வரைவு விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும், மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் அணுசக்தி உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மசோதாக்களைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்களும் விவசாயிகளும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளுக்கு எதிரான விரோதப் போக்குகளை அரசு கைவிட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த சூழலில், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்திற்குத் தான் துணை நிற்பதாக உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் இன்று தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். புதிய தொழிலாளர் சட்டங்கள் தங்களின் உரிமைகளைப் பறித்துவிடும் என தொழிலாளர்களும், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) முடக்கவோ அல்லது ரத்து செய்யவோ முயற்சிப்பது, கிராமப்புற மக்களின் கடைசி வாழ்வாதார உதவியைப் பறிப்பதற்குச் சமம். இவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, இவர்களின் குரல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இனியாவது மோடி இவர்களின் குரலுக்குச் செவிசாய்ப்பாரா? அல்லது அவர் யாருடைய அழுத்தத்திலாவது இருக்கிறாரா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளிலும், அவர்களின் போராட்டங்களிலும் நான் எப்போதும் அவர்களுடன் உறுதியாக நிற்பேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *