ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைக்க பாகிஸ்தான் செய்த போலி புகைப்பட சதி அம்பலம்

ஆபரேஷன் சிந்தூர் முடிந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பரப்பிய பொய் செய்தியை இந்தியா ஆதாரங்களுடன் முறியடித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அமிர்தசரஸ் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் தாக்கப்பட்டதாக சில செயற்கைக்கோள் புகைப்படங்களை பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஆனால், அந்தப் புகைப்படங்கள் போலியானவை என்பதும், இந்திய ராணுவ தளங்கள் எந்தவித சேதமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு மக்களை திசைதிருப்பவும், சர்வதேச அளவில் குழப்பத்தை விளைவிக்கவும் பாகிஸ்தான் இத்தகைய போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். மே மாதம் நடந்த உண்மையான ராணுவ மோதல்களின் போது எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாத பாகிஸ்தான், தற்போது ஏழு மாதங்களுக்குப் பிறகு தேதியற்ற புகைப்படங்களை வெளியிடுவது அதன் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. பாகிஸ்தானின் இத்தகைய பொய்கள் முன்னரும் பலமுறை அம்பலமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.