2027 இல் பறக்கப்போகும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நடுத்தர மக்களுக்கும் எட்டும் தூரத்தில் அதிவேக பயணம்

இந்திய ரயில்வே துறையில் புதிய புரட்சியாக ஆகஸ்ட் 15, 2027க்குள் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவையைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பை முதல் அகமதாபாத் வரையிலான 508 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 2 மணி நேரம் 17 நிமிடங்களில் கடக்கும். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில், வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமின்றி சாதாரண நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக ஐந்தாவது மலைக்குகைப் பாதை அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலவிய முந்தைய தாமதங்களைக் கடந்து தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனைகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் கவுகாத்தி-கொல்கத்தா வழித்தடத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த இரவு நேர பயண அனுபவத்தை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.