தென்னாப்பிரிக்க கார் சந்தையில் இந்தியாவிற்கு அமோக வெற்றி சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை

2025 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் வாகன சந்தையில் இந்தியா தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. லைட்ஸ்டோன் அறிக்கையின்படி, அங்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு இரண்டாவது காரும் இந்தியாவுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகேந்திரா மற்றும் டாடா போன்ற இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமின்றி, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜப்பானிய மற்றும் கொரிய பிராண்டுகளின் கார்களும் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், தென்னாப்பிரிக்காவின் மொத்த கார் விற்பனையில் 49 சதவீத பங்கைக் இந்தியா பெற்றுள்ளது.
குறைந்த உற்பத்தி செலவு மற்றும் தரமான வடிவமைப்பு காரணமாக சீன பிராண்டுகளை விட இந்திய தயாரிப்புகளை தென்னாப்பிரிக்க மக்கள் அதிகம் விரும்புகின்றனர். 2009 ஆம் ஆண்டில் வெறும் 5 சதவீதமாக இருந்த இந்தியாவின் சந்தை பங்கு, தற்போது பாதியாக உயர்ந்துள்ளாது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய பிராண்டுகளின் பெயரில் அங்கு விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் உண்மையில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது உலகளாவிய வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் அசுர வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.