புத்தாண்டு தரிசனத்தில் அதிரடி மாற்றம் திரியம்பகேஸ்வரர் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து

புத்தாண்டை முன்னிட்டு மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள புகழ்பெற்ற திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தரிசன முறையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 30 முதல் ஜனவரி 4 வரை விஐபி மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் பக்தர்கள் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க அனைத்து பக்தர்களும் பொது வரிசையில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகலாம் என்பதால் குடிநீர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தரிசனம் செய்து ஆன்மீகத்துடன் புத்தாண்டை வரவேற்க பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.