ஜப்பானை முந்தியது இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து சாதனை

இந்தியா 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்துடன் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2030 ஆம் ஆண்டிற்குள் 7.3 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டி ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இந்தியாவின் இந்த வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டியுள்ளன. வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் சந்தை சீர்திருத்தங்கள் காரணமாக உலகளாவிய வணிகச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளையும் தாண்டி இந்தியா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.