இறக்குமதி வரி உயர்வு மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், குறிப்பாக சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதன்படி, வரவிருக்கும் 2026 பட்ஜெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பொறியியல் பொருட்கள், எஃகு, இயந்திரங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் இதில் அடங்கும். தற்போது இப்பொருட்கள் மீது 7.5% முதல் 10% வரை வரி வசூலிக்கப்படும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த வரி உயர்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் இறக்குமதி 515.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவுடனான வர்த்தக இடைவெளி 72 பில்லியன் டாலராக உள்ளது. குடைகள், கண்ணாடிகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் என பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவையே இந்தியா அதிகம் சார்ந்துள்ளது. இந்தச் சூழலில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதன் மூலமும், இறக்குமதி செலவை அதிகரிப்பதன் மூலமும் தன்னிறைவு அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.