கனடா சுகாதாரத் துறையை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க் சிகிச்சைக்காக காத்திருந்த இந்தியர் உயிரிழந்த பரிதாபம்

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்த 44 வயதுடைய பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற இந்திய வம்சாவளி நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரசாந்த், ஆரம்பக்கட்ட பரிசோதனைக்குப் பிறகு காத்திருப்பு அறையிலேயே அமர வைக்கப்பட்டார். நீண்ட நேர காத்திருப்புக்கு பின் சிகிச்சைக்காக அழைக்கப்பட்ட சில வினாடிகளிலேயே அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கனடாவின் சுகாதார முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரசாந்தின் மனைவி நிஹாரிகா தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டுள்ளதோடு, மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். கனடாவின் மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைந்து வருவதாக அங்குள்ள இந்திய சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.