காரில் தண்ணீர் பாட்டிலை வைப்பதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிபுணர்கள் எச்சரிக்கை

வெயில் காலத்தில் காரின் இருக்கையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வைப்பது பெரும் தீ விபத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சூரிய ஒளி வெளிப்படையான தண்ணீர் பாட்டில் வழியாக ஊடுருவும்போது அது ஒரு லென்ஸ் போல செயல்படுகிறது. இதன் மூலம் ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு அதிக வெப்பத்தை உருவாக்குவதால் காரின் இருக்கைகள் தீப்பிடிக்க நேரிடும் என்று ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐடாஹோ மின் நிலையத்தில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தனது காரில் இத்தகைய விபத்தை நேரில் கண்டுள்ளார்.
காரில் ஏற்படும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க வெயிலில் காரை நிறுத்தும்போது தண்ணீர் பாட்டில்களை இருக்கையின் மீது வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மாறாக தண்ணீர் பாட்டில்களை இருக்கைக்கு அடியிலோ அல்லது வெப்பம் நேரடியாகத் தாக்காத நிழலான இடங்களிலோ வைப்பது பாதுகாப்பானது. சிறிய கவனக்குறைவு உங்கள் வாகனத்தை முற்றிலும் அழித்துவிடும் என்பதால் பயணத்தின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.