காதல் திருமணம் செய்த 22 நாட்களில் அதே கோயில் வளாகத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கான் பகுதியில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி குடும்ப எதிர்ப்பை மீறி மகாமாயி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்ட குஷிராம் மற்றும் மோகினி ஆகிய இருவரும், இன்று காலை அதே கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஒரே கயிற்றில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடிந்து 22 நாட்களே ஆன நிலையில், இந்த விபரீத முடிவை அவர்கள் எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தினர் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய சூழலில், இந்த தற்கொலை முடிவிற்கான பின்னணி குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.