கோரக்பூரில் அடர் மூடுபனியால் தரையிறங்க முடியாத விமானங்கள் நடுவானில் பயணிகள் தவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நிலவிய கடும் மூடுபனி காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மும்பையிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் மற்றும் டெல்லியிலிருந்து வந்த ஆகாசா ஏர் விமானம் ஆகியவை தரையிறங்க முடியாமல் முறையே ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலையால் தரையிறங்க முயன்ற விமானிகள் சுமார் அரை மணி நேரம் வானிலேயே வட்டமடித்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா மற்றும் டெல்லியிலிருந்து வரவேண்டிய மற்ற விமானங்களும் பல மணிநேரம் தாமதமாகின.
திருப்பியனுப்பப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு ஜெய்ப்பூரில் தங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடும் பனியால் அன்று 5.30 மணி நேரம் மட்டுமே விமான நிலையம் இயங்கியது. இதேபோல் வாரணாசியிலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த பயணிகள் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது வானிலை சீராவதை எதிர்நோக்கி விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.