டெல்லியில் காற்று மாசைக் குறைக்க அதிரடி நடவடிக்கை விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘பி.யு.சி சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை’ என்ற கொள்கையின் கீழ், கடந்த 24 மணி நேரத்தில் 3746 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டு, தகுந்த ஆவணங்கள் இல்லாத 568 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இந்த அதிரடி சோதனைகளை நேரில் ஆய்வு செய்தார்.
மாசுப்பாட்டைக் குறைக்க சாலைகளில் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்தல் மற்றும் ஆன்டி-ஸ்மாக் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 61,000-க்கும் மேற்பட்ட பி.யு.சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே காற்று மாசு இல்லாத டெல்லியை உருவாக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.