100 நாள் வேலைத் திட்டத்தை அழிக்க பார்க்கும் பாஜக மற்றும் ஈபிஎஸ்ஸின் துரோகம் அமைச்சர் ஐ பெரியசாமி விளாசல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கும், அதற்குத் துணை போகும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தொழிலாளர்களின் வேலை அட்டைகளை நீக்கி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மோடி அரசு பறிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாயில் நுழையாத வடமொழி பெயரில் புதிய சட்டத்தைக் கொண்டு வந்து மாநிலங்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதாகவும் அவர் சாடினார்.
மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந்த அநீதியைத் தட்டிக்கேட்காமல், எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 150 நாட்கள் வேலை தருவேன் என ஈபிஎஸ் நாடகமாடுவதாகவும், கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயலுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.