‘வரி வலை’: நாடாளுமன்றத்தில் சீறிய அபிஷேக் பானர்ஜி – தேர்தலே பதிலடி என எச்சரிக்கை!

மத்திய பட்ஜெட்டை “வாழ்நாள் வரி வலை” மற்றும் “ராபின்ஹூட் மாடல்” என்று வர்ணித்து, மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி கடும் தாக்குதலைத் தொடுத்தார். செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் முன்னிலையிலேயே பேசிய அவர், சாமானிய மக்களின் அன்றாடப் பொருட்கள் முதல் மரணத்திற்குப் பிறகு பயன்படுத்தப்படும் ஊதுபத்தி வரை வரி விதித்து நடுத்தர மக்களை மத்திய அரசு வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், நிதி தடுத்து நிறுத்தப்பட்டாலும், அதற்கான கணக்கை மக்கள் தேர்தல் களத்தில் தீர்ப்பார்கள் என்று எச்சரித்தார்.
விவசாயிகள் போராட்டம் ஒடுக்கப்படுவது மற்றும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் எனப் பல்வேறு விவகாரங்களில் மோடி அரசைச் சாடிய அவர், நாடு முழுவதும் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். இறுதியில், கவிதை வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிய அபிஷேக், வெறும் கோஷங்களால் அல்லாமல் தற்சார்பு பாதையிலேயே மேற்கு வங்கம் முன்னேறிச் செல்வதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.