வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி அபராதம்

கடந்த மூன்று நிதியாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ₹8092.83 கோடி அபராதமாக வசூலித்துள்ளன. இந்தத் தொகை வங்கிச் சேவைச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இருப்பினும், ஜன் தன் திட்டம் மற்றும் அடிப்படைச் சேமிப்புக் கணக்குகள் உட்பட சுமார் 72 கோடி கணக்குகளுக்கு இந்த அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ உட்பட ஒன்பது பொதுத்துறை வங்கிகள் இந்த அபராதத்தை ஏற்கனவே ரத்து செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு வங்கிகளும் அபராதத் தொகையைக் குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, இருப்பு குறையும் போது வாடிக்கையாளர்களுக்கு முன்னரே குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். காலக்கெடு முடிந்த பின்னரே வங்கிகள் அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.