ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? பகீர் கிளப்பும் புள்ளிவிவரங்கள்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்டகால நட்புறவு இருந்தபோதிலும், அங்கு கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ள சமீபத்திய தரவுகளின்படி, வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு தொடர்பான புகார்களில் பாதிக்கும் மேலானவை ரஷ்யாவிலிருந்து மட்டுமே வந்துள்ளன.
அதிர்ச்சியூட்டும் புகார்கள்:
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களிடமிருந்து மொத்தம் 350 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் ரஷ்யாவில் பயிலும் மாணவர்களால் அளிக்கப்பட்டவை. அதாவது, உலகளவில் பதிவாகும் புகார்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை புதின் தேசத்திலிருந்தே வருகின்றன.
ஆண்டுவாரியாக அதிகரிக்கும் பாதிப்புகள்:
- 2023: 68 புகார்கள்
- 2024: 78 புகார்கள்
- 2025: 201 புகார்கள்
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விசா ரத்து அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தினால் பல மாணவர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை.
முக்கியப் பிரச்சினைகள்:
சமீபத்தில் நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தவிர, இனவெறித் தாக்குதல்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கெடுபிடிகள் மற்றும் சக மாணவர்களின் சித்ரவதைகள் எனப் பட்டியல் நீள்கிறது. குறிப்பாக, மாஸ்கோ நகரம் இத்தகைய தாக்குதல்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களின் முறைகேடுகள்:
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் (FMGA) ஒருங்கிணைப்பாளர் டி. கௌஷல் கூறுகையில், ரஷ்யாவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் லாப நோக்கில் 200 மாணவர்களுக்குப் பதில் 1200 மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றன. பின்னர், சிறிய காரணங்களைக் கூறி இறுதி ஆண்டில் கூட மாணவர்களை இடைநீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இத்தகைய காரணங்களால், ரஷ்யாவிற்குச் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக ரஷ்யா செல்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.