மானாமதுரை போலீஸ் பிடியில் சிக்கிய வாலிபர் மரணம் கொந்தளிக்கும் உறவினர்கள்

மானாமதுரையில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்ப முயன்றபோது கீழே விழுந்து கால் முறிந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்ட நிலையில், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸார் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மானாமதுரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-ராமேசுவரம் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், நீதி மற்றும் நிவாரணம் வேண்டி உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.