மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரத்தின் நடுவே நூற்றுக்கணக்கான முதலைகள் இந்தியாவின் இந்த விசித்திரமான நதியைப் பற்றி தெரியுமா

குஜராத் மாநிலம் வதோதரா நகரத்தின் மையப்பகுதியில் பாயும் விசுவாமித்ரி நதி, ‘இந்தியாவின் முதலை நதி’ என்று அழைக்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் மக்கள் வாழும் பரபரப்பான நகரின் ஊடே செல்லும் இந்த நதியில் முதலைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகரின் 21 கி.மீ தொலைவில் மட்டும் 442 முதலைகள் உள்ளன. குறிப்பாக, கலா கோடா மற்றும் அகோடா பாலம் இடையே உள்ள 1.4 கி.மீ தூரத்தில் சுமார் 44 முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது நகர்ப்புறத்தில் மிகவும் அரிதான ஒன்றாகும்.
பவாகத் மலையில் உற்பத்தியாகும் இந்த நதி, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முதலைகளை குடியிருப்பு பகுதிகளுக்கும் சாலைகளுக்கும் கொண்டு வந்து விடுகிறது. மாசுபாடு காரணமாக மனித நடமாட்டம் குறைவாக இருப்பது இந்த முதலைகளின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் இவற்றை நதியின் பாதுகாவலர்களாகக் கருதினாலும், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நதியின் இயற்கையான ஓட்டத்திற்கு பெரும் சவாலாக உள்ளன. தற்போது இந்த நதியை மீட்கவும், முதலைகளை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.