போதைப்பொருள் விற்றவர்கள் ரெட் ஜெயின்ட் மூலம் சினிமா எடுக்கிறார்கள் நயினார் நாகேந்திரன் அதிரடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் திமுகவின் அடக்குமுறை ஆட்சி நடைபெற்று வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு நாட்டின் வளர்ச்சியை விட கஞ்சா விற்பனையிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதாக விமர்சித்தார்.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வார்த்தை ஜாலங்களால் உண்மையை திரித்து கூறி வருவதாக சாடிய நயினார் நாகேந்திரன், முறையான திட்ட அறிக்கையை கூட வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், துபாய்க்கு தப்பியோடியவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாயிலாக சினிமா எடுத்து வருவதாகவும், திமுக அரசு “ம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்” என்ற பாணியில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், அக்கட்சியினருக்கு முறையான திட்டமிடல் தெரியவில்லை என்றும், வேட்பாளர் மற்றும் கூட்ட ஏற்பாடுகளில் குழப்பம் நீடிப்பதாகவும் தெரிவித்தார். இந்தத் தேர்தல் ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான போர்க்களம் என்று குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.