பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரிதி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை மத்திய அரசு அதிரடி

மத்திய நிதி அமைச்சகம் 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது. டிசம்பர் 31, 2025 அன்று வெளியான அறிவிப்பின்படி, தொடர்ந்து ஏழாவது காலாண்டாக வட்டி விகிதங்கள் நிலையாக உள்ளன. இதன்படி பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீதமும், சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு 8.2 சதவீதமும் வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
சந்தையில் பணவீக்கம் மற்றும் பத்திர லாபம் குறைந்த போதிலும், சாமானிய முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. வங்கிகள் நிலையான வைப்பு நிதி வட்டி விகிதங்களைக் குறைத்து வரும் சூழலில், அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. என்எஸ்சி மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களிலும் பழைய வட்டி விகிதங்களே தொடரும்.