நாளை வங்கி வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! பணப் பரிவர்த்தனை பாதிக்கப்படுமா?

மத்திய அரசின் தொழிலாளர் நலக் கொள்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளை (வியாழக்கிழமை) நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக காசோலை பரிமாற்றம் (Check Clearance) மற்றும் வங்கிக் கிளைகளில் பணம் டெபாசிட் செய்வது போன்ற நேரடி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும், இது ஒருநாள் போராட்டம் என்பதால் ஏடிஎம் (ATM) சேவைகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தடையின்றி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பொது வேலைநிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, அவசர வங்கிப் பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.