நமீபியா மோதல்: அபிஷேக் விளையாடுவது சந்தேகம்; பும்ரா ‘ரிட்டர்ன்ஸ்’!

டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் ஒருபுறம் கவலையும், மறுபுறம் உற்சாகமும் நிலவுகிறது.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வயிற்று உபாதையால் அவதிப்பட்டு வருவதால், அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை அவர் விலகினால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே சமயம், இந்திய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா, வலைப்பயிற்சியில் முழு வேகத்துடன் பந்துவீசி வருகிறார். அவரது துல்லியமான பந்துவீச்சில் சூரியகுமார் யாதவே நிலைகுலைந்ததாகத் தெரிகிறது. இது பும்ரா மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியதை உறுதிப்படுத்துகிறது.
கூடுதலாக, ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணியுடன் இணைந்துள்ளார். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் முன்னிலையில் திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். டெல்லி ஆடுகளத்தில் நமீபியாவை வீழ்த்த பலமான லெவன் அணியைத் தேர்வு செய்யும் முயற்சியில் இந்திய நிர்வாகம் தீவிரமாக உள்ளது.