நண்பர்கள் இப்போது எதிரிகள்! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வெடித்துள்ள மோதல்

மத்திய கிழக்கின் நீண்டகால நட்பு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே தற்போது கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் ஏமனில் உள்ள முக்கல்லா துறைமுகத்தில் அமீரகத்தின் சரக்குகள் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல் இந்த விரிசலை உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய ரீதியான ஆதிக்கம் மற்றும் ஏமன் விவகாரத்தில் இரு நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதால், பல தசாப்த கால நட்பு தற்போது கசப்பான பகையாக மாறியுள்ளது. இது அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
எண்ணெய் பொருளாதாரத்தை தாண்டி உலகளாவிய வர்த்தக மையமாக உருவெடுக்க இரு நாடுகளும் காட்டும் ஆர்வமே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும். சவுதியின் ‘விஷன் 2030’ மற்றும் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான போட்டிகள் அவர்களை எதிரெதிர் முனையில் நிறுத்தியுள்ளன. ஏமன் மட்டுமின்றி சூடான், லிபியா போன்ற நாடுகளிலும் இவர்கள் வெவ்வேறு குழுக்களை ஆதரித்து வருகின்றனர். உலகளாவிய அதிகாரம் மற்றும் வணிக மேலாதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான போட்டி எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.