தீவிர அரசியல் எதிரியான காலிதா ஜியாவின் மறைவுக்கு ஷேக் ஹசீனா உருக்கமான இரங்கல்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் பிஎன்பி கட்சித் தலைவருமான காலிதா ஜியாவின் மறைவுக்கு அவரது நீண்டகால அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் ஜனநாயக மீட்புப் போராட்டங்களில் காலிதா ஜியாவின் பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படும் என்று ஹசீனா குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு வங்கதேச அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள அவர், தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இணைந்து போராடிய இந்த இரு தலைவர்களும், பின்னர் அதிகாரப் போட்டியால் கடும் எதிரிகளாக மாறினர். தனிப்பட்ட சோகங்களிலிருந்து அரசியலுக்கு வந்த இந்த இரண்டு பெண்களும் பல தசாப்தங்களாக வங்கதேச அரசியலின் இரு துருவங்களாகத் திகழ்ந்தனர். அரசியல் மோதல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், காலிதா ஜியாவின் மறைவின் போது ஹசீனா வெளிப்படுத்தியுள்ள இந்த மனிதாபிமான அணுகுமுறை அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.