திருமணமான 24 மணி நேரத்தில் பெண் குழந்தையை ஈன்றெடுத்த மணப்பெண் அதிர்ச்சியில் மணமகன்

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தன்கௌர் பகுதியில், திருமணமான மறுநாளே மணப்பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷாரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் தன்கௌர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை மணப்பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள், அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
இந்தச் செய்தி மணமகன் வீட்டாருக்குப் பேரிடியாக அமைந்தது. தங்களுக்குத் தெரியாமல் இந்த உண்மையை மறைத்து மோசடி செய்துவிட்டதாக மணமகன் தரப்பினர் குற்றம் சாட்டினர். மணப்பெண்ணை ஏற்க மணமகன் மறுத்துவிட்டதால், இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. இறுதியில், எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், மணப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் புலந்த்ஷாருக்கே திரும்பிச் சென்றனர்.