திருச்சி சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு இன்று கூடுகிறது

திருச்சி சிறுகனூரில் இன்று மார்ச் 9ஆம் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த மாநாட்டில் விரிவான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை 5:30 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி கொடியேற்றி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேடையில், தமிழக மக்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் திமுகவின் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.