தாய்லாந்து பயணம் செல்பவர்களுக்கு மலேசிய அரசு விடுத்த அவசர எச்சரிக்கை

தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மலேசியப் பயணிகள் தங்களது சுற்றுலாப் பயணங்களைத் தள்ளிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் ஹட் யாய் மற்றும் கிராபி போன்ற சுற்றுலாத் தலங்களில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது ஒரு காருக்கு 500 பாட் மதிப்பிலான எரிபொருள் மட்டுமே வழங்கப்படுவதால், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வது கடினமாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையால் ஹட் யாய் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் முன்பதிவுகள் 40 சதவீதமாகக் குறைந்துள்ளன. எனவே, முறையான திட்டமிடல் மற்றும் எரிபொருள் இருப்பு இன்றி எல்லையைத் தாண்டிப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மலேசிய சுற்றுலாத்துறையினர் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.