தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய தகவல்களைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 2.80 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். இறுதிப் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்குப் பிறகு இந்தத் தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்கத் தமிழக அரசு சுமார் 1,302 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த 2021 மற்றும் 2024 தேர்தல்களை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் தற்போது 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, தமிழகத்தில் மொத்தம் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். அங்குத் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்களுக்குச் சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் சமமான அனுமதி வழங்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *