சொந்த ஊரிலேயே ஐடி வேலை, திண்டுக்கல் இளைஞர்களுக்கு அமைச்சர் கொடுத்த மெகா அப்டேட்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய ‘மினி டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது. இத்தகவலை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாவட்டங்கள்தோறும் கொண்டு செல்லும் நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 17 மினி டைடல் பூங்காக்களில் 7 மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.
வேலைக்காக சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு புலம்பெயரும் திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய ஐடி பூங்கா அமைப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகள் அவர்களின் சொந்த மண்ணிலேயே கிடைக்கும். மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, திண்டுக்கல் மாவட்டத்தின் தொழில் வரைபடத்தையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.