சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி இனி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு 100 சதவீதம் முன்னுரிமை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் எல்பிஜி உற்பத்தி மற்றும் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இனி சமையல் எரிவாயு தயாரிக்க பயன்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை மற்ற பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் எரிவாயுவை அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி வீட்டு உபயோகத்திற்கு 100 சதவீத முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான நுகர்வோருக்கு குறிப்பிட்ட சதவீத விநியோகம் உறுதி செய்யப்படும்.