கோழிக்கறியின் மீதுள்ள வெள்ளை ‘நூல்’ போன்ற கொழுப்பை நீக்கவில்லையா? கவனம் தேவை!

கோழி இறைச்சியை சமைக்கும் முன் அதன் மார்புப் பகுதியில் ஒட்டியிருக்கும் வெள்ளை நூல் போன்ற பகுதியை நீங்கள் கவனித்ததுண்டா? பலர் இதை சாதாரணமாக எண்ணி நீக்குவதில்லை. அண்மையில் வெளியான ஆய்வறிக்கையின்படி, இந்த வெள்ளை இழை போன்ற பகுதி உண்மையில் கொழுப்புதான். ஆனால், இதில் வழக்கமான கொழுப்பைவிட மிக அதிகமான கொழுப்புச் சத்து உள்ளது; சில சமயங்களில் இது 224 சதவீதம் வரை அதிகமாக இருக்கலாம். இதன் விளைவாக, இறைச்சியில் உள்ள புரதத்தின் அளவு 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது. நவீன கோழி வளர்ப்பு முறைகளில், கோழிகளை விரைவாகவும் அசாதாரணமாகவும் வளர்க்கும் புதிய முறைகளைப் பயன்படுத்துவதாலேயே இந்த ‘ஹைப்ரிட் கோழி’களில் அதிக கொழுப்புச் சத்து சேர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிகப்படியான கொழுப்பை உட்கொண்டாலும் உடனடியாக பெரிய தீங்கு ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இறைச்சியில் இதன் அளவு அதிகமாக இருந்தால், அதன் சத்துக்களின் மதிப்பு குறையும். தொடர்ந்து அதிக அளவில் இந்த கொழுப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொழுப்பின் அளவு (கொலஸ்ட்ரால்) அதிகரிக்கக்கூடும். எனவே, சுகாதார அபாயங்களைத் தவிர்க்க, கோழிக்கறியை சமைக்கும்போது இந்த வெள்ளை இழைகளை நன்கு கழுவி நீக்குவது அல்லது கத்தியால் வெட்டி அகற்றுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.