குறட்டை விடுவது புற்றுநோயின் அறிகுறியா ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தூக்கத்தில் குறட்டை விடுவதை ஆழமான தூக்கத்தின் அடையாளமாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது புற்றுநோய்க்கான எச்சரிக்கை என்று கூறுகின்றனர். ‘அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ (OSA) பாதிப்பு உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 4,200 நோயாளிகளிடம் ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் பாதி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆண்ட்ரியாஸ் பாம் என்ற விஞ்ஞானி பார்சிலோனாவில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்படி, தூக்கத்தில் சுவாசம் தடைபடுவதால் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றத் தூண்டுகிறது. முன்னதாக உடல் பருமன் அல்லது நீரிழிவு நோய் மட்டுமே இதற்குக் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் குறட்டை விடுவதால் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடே முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியான குறட்டைப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.