உஷார்! காதில் வெடிக்கும் இயர்போன்: கேட்கும் திறனை இழக்கும் அபாயம்!

செய்திப் பிரிவு: ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் கேட்கும் திறனை நிரந்தரமாகப் பறிக்கக்கூடும்! சமீபகாலமாக ப்ளூடூத் இயர்பட்ஸ் (Bluetooth Earbuds) வெடித்துச் சிதறும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் அஜாக்கிரதையால் செவித்திறன் பாதிப்பு அல்லது காது தொற்று ஏற்படுவது இப்போது ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க சில முக்கியமான விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
காதுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிபுணர்கள் ‘60-60’ விதியைப் பின்பற்றப் பரிந்துரைக்கின்றனர். அதாவது, ஒலியின் அளவை (Volume) 60 சதவீதத்திற்கு மிகாமலும், தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேலாகவும் கேட்கக்கூடாது. தரம் குறைந்த மற்றும் மலிவான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; ஏனெனில் இவற்றில் உள்ள பேட்டரிகள் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும். அவ்வப்போது காதுகளுக்கு இடைவெளி கொடுப்பது மற்றும் ‘நாய்ஸ் கேன்சலேஷன்’ (Noise Cancelling) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உங்கள் காதுகளை நீண்டகால பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.